யோகி அரசு நலத்திட்டங்களை நிறைவேற்றாமல், கோவில் கட்டுவதையே வேலையாகக் கொண்டுள்ளது என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதான கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான கோரிக்கையை முன்வைத்துள்ளன. அதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஓ.பி.ராஜ்பர் யோகி அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் பேசியதாவது, ‘யோகி அரசு கோவில் கட்டுவதில்தான் குறியாக இருக்கிறது. ஏழை மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைப் பற்றி அதற்கு கவலை இல்லை. நான் என் கோரிக்கைகளை முன்வைக்கும்போது, அவர்கள் 325 சீட்டுகளைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர்’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘மதுராவிலும், காசியிலும் கோவில் கட்டுவது பற்றியே பேசுவதும், கொண்டாடுவதுமா ஒரு அரசின் வேலை? உண்மையைப் பேசினால் கிளர்ச்சி என்பார்கள் என்றால், நான் அதையே செய்வேன்’ என கூறியுள்ளார்.
மதத்தின் பேரால் பா.ஜ.க. மக்களைப் பிரித்தாள்கிறது. பல தேர்தல் வாக்குறுதிகளைத் தந்து மக்களையும் ஏமாற்றியுள்ளது. பிரச்சனைகளை மடைமாற்றுவதுதான் அந்த கட்சியின் அடையாளம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.