பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவின் வாக்கு சதவீதத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் பாஜக உடனான கூட்டணி குறித்தும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இடைத்தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்காக காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜக போன்ற கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து வாக்கு சேகரித்தபோது அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவின் வாக்கு சதவீதத்திற்கு நிச்சயமாக பாதிப்பு ஏற்படாது. அதிகரிக்கத்தான் செய்யும். அவர்கள் ஒரு இயக்கம். கொள்கை கோட்பாடு வேறு. அரசியலில் தேர்தல் காலங்களில் கூட்டணி வைப்பது என்பது வேறு. கொள்கை அடிப்படையில் அதிமுக சமுதாயத்திற்கு அப்பாற்பட்டது. ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற அடிப்படையில் செயல்படுகிற இயக்கம். எனவே இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” எனக் கூறினார்.