தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கிறார் சக்கரவர்த்தி, பாஜகவின் மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர். நேற்று முன் தினம் சக்கரவர்த்திக்குப் பிறந்தநாள். அதனையொட்டி, பாஜக தலைவர்கள், மாநில - மாவட்ட நிர்வாகிகள் என பலரின் வாழ்த்து மழையில் நனைந்தார் சக்கரவர்த்தி.
இவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் 2 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் நாள் கொண்டாட்டமான நேற்று (26/07/24) சென்னை ராயப்பேட்டையில் உள்ள சவேரா ஹோட்டலில், தனக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு மட்டும் காக்டெய்ல் மதுவிருந்து பார்ட்டி கொடுத்துள்ளார் சக்கரவர்த்தி. இதில், பாஜகவினருக்கு அழைப்பில்லை. நயினார் நாகேந்திரன் மட்டும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. பாஜக மாநில தலைவர் உட்பட பாஜகவினரை புறம்தள்ளிவிட்டு, தொழிலதிபர்களை மட்டும் காக்டெய்ல் பார்ட்டி நடத்தியிருக்கிறார் சக்கரவர்த்தி.
இந்த விசயம், கமலாலயத்தில் ஆதங்கத்துடனும் கோபத்துடனும் பேசப்படுகிறது. பாஜகவினரை தவிர்த்துவிட்டு காக்டெய்ல் மது விருந்து கொடுக்கப்பட்டதால் கோபமா ? என்று நாம் விசாரித்தபோது, "அப்படியெல்லாம் இல்லை. பாஜக தலைவர்களையும் நிர்வாகிகளையும் அழைக்காமல் மது விருந்து கொடுக்கப்பட்டது இங்கு பிரச்சனை அல்ல. மது விருந்து கொண்டாட்டங்களுக்கு எதிராகவும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் வகையில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்துங்கள் என திமுக அரசை வலியுறுத்தியும் பாஜக போராடி வரும் சூழலில், இது போன்ற காக்டெய்ல் பார்ட்டி அவசியம்தானாங்கிறதுதான் கோபத்துக்கு காரணம் " என்கிறார்கள். சக்கரவர்த்தியின் காக்டெய்ல் பார்ட்டிதான் கமலாலயத்தில் பேசு பொருளாகப் பரபரப்பாகியிருக்கிறது.