தமிழக பா.ஜ.க.வின் இளைஞரணிச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சூர்யா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பஹ்ரைனில் நடந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, ’ஏதோ ஒரு ஷாப்பிங் வளாகத்துக்குள் செல்லும் பெண்கள், விநாயகர் சிலைகள் அனைத்தையும் வெறுப்புடன் உடைத்தெறிகிறார்கள். அவைகளுக்கு அவர்கள் பணம் கொடுத்திருப்பார்கள் என்றாலும், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு மதவெறி?’ என பா.ஜ.க. இளைஞர் சூர்யா ட்விட்டரில் பதிவு செய்திருப்பதன் அடிப்படையிலேயே இந்தப் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
புகார் கொடுத்துள்ள வழக்கறிஞர் மணிமாறன், மேற்கண்ட தகவல்களை தனது புகாரில் சுட்டிக்காட்டியிருப்பதுடன், சூர்யாவின் பதிவுகள் கடுமையான வகுப்புவாத அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்பதால் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153, 1513(1)(அ), 295(ஏ) 505(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்தறிய, நாம் சூர்யாவின் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து நாம் முயற்சித்தபோது, ஒரு துக்க நிகழ்வில் இருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் மெசேஜ் அனுப்பியிருந்தார். ஆனால், தொடர்பு கொள்ளவில்லை.