2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் நான்காவது நாளான இன்று சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "2004ம் ஆண்டு ஒன்றிய அளவில் காங்கிரஸ் ஆட்சி மாறி திமுக கூட்டணி ஆட்சி வந்த பிறகு ரூ. 247 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டப் பணிகள் 50 சதவீதம் முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேது சமுத்திர திட்டம் உகந்ததாக இருக்கும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தால் எங்களை விட யாரும் அதிகமாக மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். ராமர் பாதைக்கு பாதிப்பில்லாமல் திட்டத்தைச் செயல்படுத்தினால் பாஜக ஆதரவளிக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.