தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
அந்த வகையில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (26/03/2021) தமிழகம் வந்தார். அதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது; "வாரிசு அரசியலை முன்னெடுக்கும் தி.மு.க. கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். மாநில கட்சியாக இருந்தாலும் தேச உணர்வோடு அ.தி.மு.க. உள்ளது. 72 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உலகின் மருந்தகமாக இந்தியா உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதால் தமிழகத்தில் கரோனா பாதிப்பில்லை. தமிழகத்தில் உள்ள 44,000 கோயில்களையும் சாதுக்கள், சாமியார்களிடம் ஒப்படைப்போம்" என்றார்.
இதனிடையே, சென்னையில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் ஜெ.பி.நட்டா பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் அமைச்சரும், ராயபுரம் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருமான ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.