Skip to main content

போங்கப்பா நீங்களும் உங்க ஒதுக்கீடும்... அதிமுகவின் ராஜதந்திரத்தால் கடுப்பான பாஜக!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

விருதுநகர் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இடங்கள் தொடர்பாக தி.மு.க. மா.செ.க்கள், கே.கே.எஸ்.எஸ்.ஆர். மற்றும் தங்கம் தென்னரசுவுடன் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும், 15 ஆம் தேதி இரவு வரையிலும் உடன்பாடு ஏற்படாமல் வெறுத்துப்போய், "தனித்துப்போட்டி' என்று சிலிர்த்து நின்று கோபமுகம் காட்டினார்கள் சி.பி.எம். கட்சியினர்.
 

dmk



காங்கிரஸ் தரப்பிலோ, “பெரிய கட்சி என்று எங்களைப் பார்க்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., வி.சி. கட்சிகளைப் போல எங்களுக்கும் யூனியனுக்கு ஒரு இடம்தானாம். சி.பி.எம். போல, தனித்துப் போட்டி என்றெல்லாம் பேச்சுக்குக்கூட எங்களால் எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. ஒவ்வொரு யூனியனிலும் காங்கிரசுக்கென்று ஓட்டு வங்கி இருப்பதை தி.மு.க. ஏனோ உணரவில்லை. கூட்டணியிலிருந்து வெளியேறினால், அது அ.தி.மு.க.வுக்குத்தானே சாதகமாகிவிடும்? அதனால்தான் அமைதி காக்க வேண்டியதாகி விட்டது'' என்று புலம்புகின்றனர்.

 

admk



அ.தி.மு.க. மா.செ. கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் போன்றோர் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்திய விதத்தைப் பார்ப்போம்!

எடுத்த எடுப்பிலேயே, “நீங்க நிற்கணும்னு சொல்லுற இடத்துல நிற்கிறதுக்கு எங்காளுங்க ரெடியா இருக்காங்க. எங்ககிட்ட நெறய பணம் இருக்கு. உங்ககிட்ட அந்தளவு இருக்கா?'' என்று கேட்டு நிலைகுலைய வைத்துவிட்டு, "சரி.. உங்களால எவ்வளவு செலவு பண்ண முடியும்? அந்த வார்டுல நின்னா ஜெயிக்க முடியும்கிற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்துச்சு? அ.தி.மு.க. கூட்டணிங்கிறது இருக்கட்டும். உங்க சொந்த செல்வாக்கு என்ன?'' என்று சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டு, புள்ளிவிபரத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். பேச்சுவார்த்தை என்ற பெயரில் கூட்டணிக் கட்சியினரை வேட்புமனு தாக்கல் நாள் வரையிலும் இழுத்தடிப்பது ஆளும் கட்சியினரின் ராஜதந்திரமாம். பா.ஜ.க. தரப்பில்  அட, போங்கப்பா.. நீங்களும் உங்க ஒதுக்கீடும்..'' என்று எரிச்சலாகிவிட்டார்கள்.

 

admk



தே.மு.தி.க.வினரிடம், "இதுக்கு முன்னால நீங்க நின்னு ஜெயிச்ச இடத்தை மட்டும் கேளுங்க'' என்று அ.தி.மு.க. தலைகள் சிடுசிடு முகங்களைக் காட்டியிருக்கின்றன. சமத்துவ மக்கள் கட்சியினரின் நிலையோ பரிதாபம். அக்கட்சியின் விருதுநகர் மா.செ.க்கள் தரப்பில், பேச்சு வார்த்தை அனுபவத்தை சரத்குமாருக்கு மெசேஜாக அனுப்பிவிட்டார்கள். இதோ அந்த மெசேஜ்:


"உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்தோம் அண்ணா. நேற்றுதான் அழைப்பு விடுத்தார்கள். சந்திக்கச் சென்றோம். சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் ஏதோ பேசிவிட்டு, பகல் முழுக்கக் காத்திருக்க வைத்துவிட்டு, லேட் நைட்டில்தான் எங்களிடம் பேசினார். தே.மு.தி.க., பா.ஜ.க.வுக்கெல்லாம் சீட் ஒதுக்கிவிட்டார்கள். நம் கட்சிக்கு மட்டும் சரியான அணுகுமுறை இல்லை அண்ணா. நாம் நின்றால் நிச்சயம் வெற்றி பெறக்கூடிய ராஜபாளையம் 16-வது வார்டையும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தின் 9-வது வார்டையும் மட்டும்தான் கேட்டோம் அண்ணா!'' என்று உருக்கமாக விவரித்துள்ளனர். ஆனால் ச.ம.க. தலைவர் சரத்குமாரோ, "நாங்கள் கேட்டதில் 90% இடங்களை அ.தி.மு.க. கொடுத்து விட்டதால் எங்களுக்கு திருப்தி'' என சொல்லியிருக்கிறார்.

அ.ம.மு.க.வை பொறுத்தமட்டிலும், விருதுநகர் மாவட்டத்தை, தங்களின் கோட்டை என்றே சொல்லி வருகின்றனர். அக்கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட நிர்வாகியிடம் பேசினோம். “ரெடி பொசிஷன்ல இருக்கோம். 100 பெர்சன்ட் போட்டியிடறோம். ஆமா. எல்லா மாவட்ட கவுன்சிலர்.. எல்லா ஒன்றிய கவுன்சிலர்.. நாலு தொகுதிலயும் 11 மாவட்ட கவுன்சிலர்.. 113 ஒன்றிய கவுன்சிலர்ன்னு, எல்லாருமே வேட்புமனு தாக்கல் பண்ணிட்டாங்க. அதேமாதிரி, கிழக்கு மாவட்டத்துலயும் எல்லாரும் கட்டிட்டாங்க'' என்றார்.


"பணபலம் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சிந்துமுருகன், நேற்றுவரையிலும் அ.ம.மு.க.வில் இருந்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. பக்கம் வந்திருக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் சீட் தராமல், இவரை வத்திராயிருப்பு ஒன்றியத்திலுள்ள நந்தம்பட்டியில் ஒன்றிய குழு உறுப்பினராகப் போட்டியிட வைக்கிறார்கள். இவர்தான் சேர்மன் வேட்பாளர் என்றும் சொல்லிவருகிறது அ.தி.மு.க. இப்படித்தான் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பணத்தை மட்டும் நம்பியே ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நிற்கின்றன'' என்கிறார்கள் லோக்கல் அரசியல் தெரிந்தவர்கள்.


 

 

சார்ந்த செய்திகள்