கட்சி நிர்வாகிகளிடம் சசிகலா பேசிய ஆடியோக்கள் பொதுவெளியில் ரிலீஸாகி பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக, அதிமுகவில் ஏகத்துக்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோக்களை சசிகலாதான், தனது உதவியாளர் மூலம் ரிலீஸ் செய்ய வைத்தார். சசிகலாவின் அந்த ஆடியோ பேச்சுக்களுக்கு எதிராக பேட்டிட்யளித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, “அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் சம்மந்தமில்லை. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்தாமல் அவர் அமைதியாக இருக்க வேண்டும். அவரது பேச்சை அதிமுகவினர் கண்டுகொள்ள மாட்டார்கள்” என்றெல்லாம் கடுமையாகப் பேசியிருந்தார்.
கே.பி. முனுசாமியின் பேட்டியை சசிகலாவுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார்கள் அவரது உதவியாளர்கள். முனுசாமியின் பேச்சைக் கேட்டு எந்த ரியாக்சனையும் காட்டாத சசிகலா, “அதிமுகவில் முனுசாமி எப்படி ஏற்றம் பெற்றார்ங்கிறது அவருக்கே தெரியும். நான் இல்லைன்னா முனுசாமிக்கு அதிமுகவில் இடம் கிடையாது. இப்போ கூட, அவர் அவராகப் பேசவில்லை. பழனிசாமி (எடப்பாடி) சொல்லித்தான் பேசுகிறார். லாப நட்ட கணக்கு போட்டுத்தான் எல்லோருமே அரசியல் செய்கிறார்கள் என்று ஓப்பனாக பகிர்ந்துகொண்டிருக்கிறார் சசிகலா” என விவரிக்கிறார்கள் சசிகலா தரப்பின் உள்வட்டாரங்களை அறிந்தவர்கள்.