நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே சமயம் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களவைத் தேர்தலுடன் ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. பிஜு ஜனதாதளம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் ஓடிசாவில் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதாதளம் உடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் இடையே உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வின் நிபந்தனைகளை பிஜு ஜனதா தளம் ஏற்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமலின் எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும், மாநில சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒடிசாவில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது என்பது தெளிவாகியுள்ளது. அதே சமயம் இது குறித்து பா.ஜ.க. எம்.பி. அப்ரஜிதா சாரங்கி கூறுகையில், “அனைத்து தொகுதிகளிலும் எங்கள் (பா.ஜ.க.) வேட்பாளர்களை நிறுத்துவோம். 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 மாநில சட்டசபை தொகுதிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த ஆற்றலும், மிகுந்த உற்சாகமும், தேர்தல் பணியின் மீது மிகுந்த ஆர்வமும் உள்ளது, எது நடந்ததோ அது நடக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த சரியான முடிவை எடுத்த அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளம் 12 மக்களவைத் தொகுதிகளையும், பா.ஜ.க. 8 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. மேலும் பிஜூ ஜனதா தளத்துடன் பா.ஜ.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே ஒடிசாவில் மக்களவைத் தேர்தலை கடைசி 4 கட்டங்களாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.