ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ராகுல் காந்திக்கு எம்.பி பதவியை மீண்டும் வழங்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது ட்விட்டரில், “ராகுல் காந்திக்கு சூரத் செஷன்ஸ நீதிமன்றம் தண்டனை விதித்த 26 மணி நேரத்தில் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ராகுல் காந்தியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து 26 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் ஏன் அவர் எம்.பி.யாக தொடரலாம் என அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசிவிடுவார் என பிரதமர் மோடி பயப்படுகிறாரா” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், “ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அவரது எம்.பி. பதவி நீக்கத்தை ஏன் திரும்பப் பெறவில்லை. அவரைத் தகுதி நீக்கம் செய்யக் காட்டிய அவசரத்தைத் திரும்பப் பெறுவதில் ஏன் காட்டவில்லை. சகோதரர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதைக் கண்டு பாஜக அஞ்சுகிறதா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.