“அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத அதிமுக அரசின் தான் தோன்றித்தனமான - மூர்க்கத்தனமான அணுகுமுறை மேலும் பல போராட்டக் களங்களை உருவாக்கும்” என திமுக செயல் தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்”, “21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை வழங்க வேண்டும்”, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடத்திய ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், நீண்டநாட்களாக நிலுவையில் இருந்துவரும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் ஆர்வம் காட்டாமல், அவர்களின் போராட்டத்தை அடக்குவதற்கு காவல்துறையை ஏவிவிட்டு, கைது செய்யும் அதிமுக அரசின் அராஜகப் போக்கினை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக ஒப்புகொண்டு விட்டு, அதை அரசு இன்னும் திரும்பப் பெறவில்லை. அதற்காக நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை இன்றுவரை பெறப்படவும் இல்லை. அந்தக் குழுவிற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதும் தெளிவாக்கப்படவில்லை. முன்கூட்டியே வைத்த ஊதிய மாற்றம், ஊதிய முரண்பாடுகள் தொடர்புடைய கோரிக்கைகள் எதையும் தீர்த்து வைக்காமல், காலதாமதம் செய்துவிட்டு, போராட்டம் என்றதும் திடீரென்று கமிட்டிகள் போடுவது மட்டுமே தீர்வு என்று அதிமுக அரசு கருதுவது, பொறுப்புள்ள அரசின் செயல்பாடாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை அரசே மீறுவது, சட்டத்தின் ஆட்சியை அரசே மதிக்கவில்லை எனும் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பது மிகுந்த கவலையை அளிப்பதாக இருக்கிறது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு பல லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க ஒரு கமிட்டியை அறிவித்துள்ள அரசு, பணியில் உள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் இருப்பது தான் தோன்றித்தனமான - மூர்க்கத்தனமான அணுகுமுறை என்றே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
ஆகவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை அடக்குவதில் கவனம் செலுத்தாமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற போராட்டக் களங்கள் உருவாகும் சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.