அமெரிக்கா சென்றிருந்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சுனில் அரோரா, கரோனா விவகாரத்தால் இந்தியா திரும்ப முடியாமல் இருந்தார். மூன்று மாதங்கள் கடந்த நிலையில், 15 நாட்களுக்கு முன்பு டெல்லி திரும்பினார். டெல்லி திரும்பியதும் தனிமைப்படுத்திக்கொண்ட சுனில் அரோரா, தற்போது ஆணையத்தின் பணிகளைக் கவனிக்கத் துவங்கியிருக்கிறார்.
எதிர்வருகிற நவம்பர் மாதத்திற்குள் பீஹார் மாநிலத்துக்கும், 2021-மே மாதத்திற்குள் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தலை நடத்தியாக வேண்டும். இதற்காக முன்னெடுக்க வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து சக அதிகாரிகளுடன் விவாதித்திருக்கிறார் சுனில் அரோரா.
கரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதும், அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் சீரியஸ் காட்டி வருவதும் சட்டமன்ற தேர்தல்கள் நடக்குமா? என்கிற கேள்விக்குறி சமீபகாலமாக தேசிய அரசியலில் எதிரொலித்தபடி இருக்கிறது. இருப்பினும், மாநில அரசுகளைத் தொந்தரவு செய்யாமல், மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் விவாதிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் சுனில் அரோரா.
தேர்தல் நடக்கும் மாதத்திற்கு 6 மாதங்களுக்கு முன்பே தேவையான அடிப்படை பணிகளைத் தலைமைத் தேர்தல் ஆணையம் துவக்கியாக வேண்டும். குறிப்பாக, புதிய வாக்காளர்கள் பதிவு, போலி வாக்காளர்கள் நீக்கம், முகவரி மாறுதல், தவறான தகவல்கள் திருத்தம் என பல்வேறு பணிகளை 6 மாதங்களுக்கு முன்பே மாநில அரசுகள் துவக்க வேண்டும். இத்தகைய நடைமுறைகள் செய்ய வேண்டியிருப்பதால்தான் தேர்தல் அதிகாரிகளோடு விரைவில் விவாதிக்கவிருக்கிறார் சுனில் அரோரா.