அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை தான் என எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமை தான் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறிமாறி அணி திரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டதாக ஓபிஎஸ் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்திற்கு அனுமதி இல்லை எனவும், கட்சி விதிகளுக்கு முரணாக ஓபிஎஸ் செயல்படமாட்டார் என்றும் ஓபிஎஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதில் பதிலளித்துள்ள இபிஎஸ் தரப்பு, இது நடக்கும் இது நடக்காது என்று சொல்லமுடியாது. பொதுக்குழுவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், முடிவெடுக்கலாம். எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும். அதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கொள்கையை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. செயல்திட்டங்கள் இல்லாமல், அஜெண்டா இல்லாமல் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடந்துள்ளது.பொதுக்குழுவில் பெரும்பான்மையானோர் கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம் என வாதிடப்பட்டுள்ளது.