அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் உருவ பொம்மையை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே பரபரப்பான கருத்து மோதல் நடைபெற்று வருகின்றது. இதில் அண்ணாமலை, ‘நான் ஜெயலலிதா போன்றவர் எதற்கும் பயப்பட மாட்டேன். ஜெயலலிதா போல் துணிந்து நடவடிக்கை எடுப்பேன்’ என்று ஜெயலலிதாவுடன் தன்னை ஒப்பிட்டு பேசினார். இது அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவுடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டு பேசுவது பிதற்றல் பேச்சு. ஒப்பிட்டு பேசுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுவதோடு அண்ணாமலை பேசியதை வன்மையாக கண்டித்து வருகிறார்கள். அதன் எதிரொலியாக அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடை வீதியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜா ரவி தலைமையில் அதிமுகவினர் அண்ணாமலை உருவப் படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.