அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறு பாடு மூலம் கடந்த நான்கு வருங்களுக்கு முன்பு அழகிரியை கட்சியிலிருந்து ஓரம் கட்டியது அறிவாலயம். அதை தொடர்ந்து மதுரை, தேனி மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருந்து வந்த அழகிரி ஆதரவாளர்களையும் தலைமை கட்சியிலிருந்து கட்டம் கட்டியது. அதன் பின் அழகிரியும் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். ஆனால் அழகிரி ஆதரவாளர்களோ பிறந்த நாளை மட்டும் வெகு சிறப்பாக மதுரை, தேனி மாவட்டத்தில் நடத்தி வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள் .
இந்த நிலையில் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைவர் கலைஞர் திடீரென கடந்த 7ம்தேதி மறைந்தார். கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அழகிரி, கட்சியில் உள்ள தொண்டர்கள் எல்லாம் என் பக்கம் இருக்கிறார்கள் என்று அதிரடியாக பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்தார். அதை தொடந்து வருகிற 5ம்தேதி அழகிரி சென்னையில் பேரணி நடத்தவும் இருக்கிறார்.
இந்த நிலையில் திமுக தலைமையும் செயற்குழுவை கூட்டியதில் கூட தளபதிதான் கட்சி தலைவராக வர வேண்டும். அவர் வழியில் தான் நாங்களும் தொண்டர்களும் இருக்கிறார்கள் என்று மாநில பொறுப்பில் உள்ள உ.பிகளும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் வருகிற 28 ம்தேதி பொது குழுவையும் திமுக தலைமை கூட்டி இருக்கிறது.
இது பற்றி தேனி மாவட்டத்தில் உள்ள அழகிரி ஆதரவாளர்கள்....... தலைவர் இருக்கும் வரை அண்ணன் அழகிரி கட்சியை பற்றி எதுவும் பேசவில்லை. அந்த அளவுக்கு தலைவர் மேல் மரியாதை வைத்து கொண்டு தான் தளபதி செயலையும் கண்டு கொள்ளவில்லை. அப்படி இருந்தும் மீண்டும் அண்ணனை கட்சியில் இணைத்து பொறுப்பும் தரவில்லை. அதனால் டென்ஷன் அடைந்த அண்ணன் தற்பொழுது தலைவர் மறைவுக்கு பிறகு விஸ்வரூபம் எடுத்து பேட்டி, பேரணி என அரசியலில் அதிரடியாக மீண்டும் குதித்து இருக்கிறார்.
ஆனால் தலைவர் இருந்த போது அண்ணனுக்கு தென் மாவட்ட பொறுப்பாளர் போஸ்டிங் கொடுத்ததால் திருமங்கலம் இடைத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற வைத்தார். அதன் மூலம் தென் மாவட்டங்களில் அண்ணனுக்கு தனி செல்வாக்கு இருக்கு. அதுபோல் வட மாவடங்களிலும் எங்களை போல் அண்ணன் ஆதரவாளர்களான பெரும்பாலான கட்சிகாரர்கள் இருக்கிறார்கள். அதனால அண்ணன் தற்பொழுது தமிழக அளவில் அரசியல் செய்ய இருக்கிறார். அதனால தான் அண்ணன் விசுவாசிகளான நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், அண்ணன் அழகிரியை முதலில் கட்சியில் சேர்க்க வேண்டும்.
அப்படி அண்ணனை கட்சியில் சேர்த்தால்தான் கட்சி மேலும் வழுவடையும். அதன் மூலம் அரசியல் எதிரிகளும் நம்மை கண்டு பயப்படுவார்கள். அதை விட்டுவிட்டு நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு மூலம் மற்ற அரசியல் கட்சிகள் அதன் மூலம் குளிர்காய்ந்து விடும். அதனால தலைவர் அடையாளம் காட்டிய தளபதியே தலைவராக இருக்கட்டும். ஆனால் எங்க அண்ணன் அழகிரிக்கு மாநில பொறுப்பு கொடுக்க வேண்டும். அதன் மூலம் அண்ணனும் மாநில அளவில் அரசியல் பண்ணுவார். அதன் மூலம் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளையும் கைப்பற்றுவதின் மூலம் சட்ட மன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும். அதனால பொதுக்குழுவில் அண்ணனுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டும் அதுதான் எங்களுடைய விருப்பமாகவும் இருக்கிறது என்று கூறினார்கள். ஆக திமுக தலைமை நடத்தும் பொதுக்குழுவில் அழகிரிக்கு பொறுப்பு கொடுத்தால் பேரணியை கேன்ஷல் பண்ணிவிடுவார். இல்லை என்றால் பேரணியை நடத்தி ஆழகிரி தன் பலத்தை காட்ட இருக்கிறார் என்பது தான் உண்மை.