தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுகவின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திமுக மகளிரணி செயலாளரான கனிமொழியும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிராச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகமாக பரவி வருகிறது. அதனால் இந்தக் காலக்கட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கட்சியின் வேட்பாளர்கள் என பலரும் கரோனா நோய் தொற்றுக்கு ஆளாகினர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் கனிமொழி ஈடுபட்டிருந்தார். பின்னர் சென்னைக்குத் திரும்பிய அவருக்கு உடற்சோர்வு ஏற்பட்டது.
பின்னர் பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானது. தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு ஒருநாள் முன்பு கரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் (06.04.2021) மருத்துவமனையில் இருந்த கனிமொழி, கரோனா பாதுகாப்புக்கான முழு கவச உடையுடன் ஆம்பூலன்ஸில் வந்து வாக்களித்துச் சென்றார். இதனையடுத்து கரோனா சிகிச்சையில் குணமடைந்த காரணத்தால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கனிமொழி நேற்று வீடு திரும்பினார்.
அவருக்கு மகளிர் அணியினர் வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி கனிமொழி எந்தப் பணியிலும் ஈடுபடாமல் 5 நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார்.