![anbumani ramadoss](http://image.nakkheeran.in/cdn/farfuture/yYUMaFbI8K2VwKeFZv8pHt7jzdJ921UwD7AFrvaJeCs/1588756578/sites/default/files/inline-images/610_6.jpg)
தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்கும் முடிவைக் கைவிட்டு, தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனைத்து தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு அதன் முடிவைத் தளர்த்திக் கொள்ளாததும், மதுக்கடைகளை நாளை திறக்க ஏற்பாடுகளைச் செய்து வருவதும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு தவறான நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகத் தவறான நடவடிக்கையாகும்.
வரலாற்றில் சில வாய்ப்புகள் மிகவும் அரிதாகவும், அதிசயமாகவும் தான் கிடைக்கும். அத்தகையதொரு வாய்ப்பு தான் தமிழக அரசுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் 23 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த 1971- ஆம் ஆண்டில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. அதன்பின் சில ஆண்டுகளுக்கு மதுக்கடைகள் திறக்கப்படுவதாகவும், மூடப்படுவதாகவும் இருந்த நிலை மாறி 1981- ஆம் ஆண்டு முதல் மது வணிகம் தடையின்றி நடைபெற்று வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக நீடித்து வந்த இத்தகைய நிலையை மாற்றி, தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பைக் கடந்த 40 நாட்கள் ஊரடங்கு உருவாக்கிக் கொடுத்தது. மிக மிக அரிதான அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம் வரலாறு படைப்பதற்கான வாய்ப்பைத் தமிழக அரசு தவற விட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறப்பதற்காகத் தமிழக அரசு சார்பில் கூறப்படும் காரணம் ஏற்கத்தக்கது அல்ல. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று மது அருந்துவது இயல்பாக நடைபெறும் ஒன்று தான். இரு மாநிலங்களின் எல்லைகளை ஒரு சாலையோ, ஒரு வீதியோ மட்டும் தான் பிரிக்கும் என்ற சூழலில் எல்லையில் உள்ளவர்கள் தான் அண்டை மாநிலத்திற்குச் செல்வார்கள். இது புறக்கணிக்கத்தக்க அளவில் மிகச் சில பகுதிகளில் விதிவிலக்காக நடக்கும் நிகழ்வாகும். இதையே விதியாகக் கருதிக் கொண்டு சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகளைத் திறப்பது உடல் நலக் கேடுகளையும், சமூக நலக் கேடுகளையும், சட்டம் & ஒழுங்கு பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதுடன், குற்றங்கள் அதிகரிப்பதற்கும் வழி வகுக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.
மதுக்கடைகளைத் திறப்பது தனித்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இன்றைய கரோனா பரவல் சூழலையும் கருத்தில் கொண்டு தான் இதைப் பார்க்க வேண்டும், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் போயிருப்பதற்கான முக்கியக் காரணங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளும், சமூக இடைவெளியும் முழுமையாகக் கடைப்பிடிக்கப் படாததுதான். மதுக்கடைகள் திறக்கப்பட்டால் இந்த இருவிதிகளையும் பெயரளவுக்குக் கூட கடைப்பிடிக்க முடியாது. அது இன்னும் அதிக வேகத்தில் கரோனா வைரஸ் நோய் பரவுவதற்கே வழிவகுக்கும். அது மிகவும் ஆபத்தானது.
அதுமட்டுமின்றி, கரோனா பரவல் காலத்தில் மது கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மது அருந்துவது மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் என்றும், அதனால் மது அருந்துபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், மது அருந்துவதற்கான வாய்ப்புகளையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் ஒழிப்பில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் வழிகாட்டும் அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையைக் கூட மதிக்காமல் மீண்டும் மதுக்கடைகளைத் திறப்பது கரோனா அரக்கனுக்குத் தமிழகத்தின் வாயில்களை நாமே திறந்து விடுவதற்கு ஒப்பானது ஆகும்.
தமிழ்நாட்டில் கடந்த 6 வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்கள் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளன. அவர்களின் கைகளில் அடுத்த வேளை உணவுக்குக் கூட காசு இல்லை. இத்தகைய சூழலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், மது அருந்துவதற்காக வீட்டில் உள்ள பொருட்களையும், மனைவியின் தாலியைப் பறித்து அடகு வைப்பது, திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற அவலங்கள் ஏற்படக் கூடும். இப்படி ஒரு நிலை ஏற்படுவதில் அரசுக்கு விருப்பம் இருக்காது என்றே நான் நம்புகிறேன். இத்தகைய அவல நிலை ஏற்படக் கூடாது என்றால், மதுக்கடைகளைத் திறப்பதை அரசு கைவிட வேண்டும்.
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/f2-6VTdahUk7PVCzbD7NULmsVnFxGOu4I_v4Ab8hcRE/1586170537/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)
இவை அனைத்துக்கும் மேலாகப் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி முழு மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் இன்றைய அரசின் வழிகாட்டியாகக் கூறப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம் ஆகும். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இதற்கான வாக்குறுதியை அளித்த அவர், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கட்டமாக 500 மதுக்கடைகளை மூடினார். அவருக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் 2017- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இரண்டாம் கட்டமாக 500 மதுக்கடைகளை மூடினார். அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக மதுக்கடைகள் மூடப்படாத நிலையில், இப்போது அதைச் செய்து தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பொன்னான அந்த வாய்ப்பைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்கும் முடிவைக் கைவிட்டு, தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.