திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் இருந்து ஆம்பூர் பிரிக்கப்பட்டு ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் 2011-16 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அஸ்லம் பாஷா போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் இளஞ்செழியன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ம.ம.க. வேட்பாளர் அஸ்லம் பாஷா வெற்றிபெற்றார்.
அதன்படி ஆம்பூர் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இவர் மனிதநேய மக்கள் கட்சியில் மாநில அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த 5 மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் ஜூலை 21ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு காலமானார்.
இவருக்குத் திருமணமாகி மனைவி, ஒரு மகளும் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மறைவு கட்சியினர் மற்றும் தொகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.