நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், ‘பாஜகவுடன் அதிமுகவுக்கு ஒட்டுமில்லை, உறவும் இல்லை. பாஜக என்பது கழட்டிவிடப்பட்ட பெட்டி அதனை மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்பதை தேர்தலின் போது அம்பலப்படுத்துவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித்ஷா கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஜெயக்குமார், “பாஜகவுக்கு அதிமுக கூட்டணிக்கான கதவுகள் சாத்தப்பட்டு விட்டன. பாஜக வேண்டுமானால் கூட்டணிக்கான கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். முன்வைத்த காலை எப்போது பின் வைக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் பாஜகவையும் கொண்டு வருவது குறித்தும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.