என் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க.வின் கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக கொண்டு வாழ்வதாகவும், நான் பா.ஜனதாவுக்கு செல்லப் போகிறேன் என்பது வடிகட்டிய பொய் என்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க.வின் ஒரு சாதாரண தொண்டனாக பொதுவாழ்க்கையில் களப் பணியாற்றி பெரியகுளம் நகராட்சி தலைவராகவும், புனிதமிக்க சட்டப்பேரவைக்குள் பாதம் பதிக்கிற வாய்ப்பை வழங்கி, பிறகு அரசியல் சாசனத்தின் பேரில் வருவாய்த்துறை அமைச்சராக, நிதி அமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக, இவையாவிற்கும் மேலாக இந்த நாட்டு அரசியலையே தென்னாட்டு பக்கம் திருப்பிக்காட்டிய நான் வணங்கும் தெய்வத் தாயாம் ஜெயலலிதா வீற்றிருந்த முதல்-அமைச்சர் இருக்கையில் 3 முறையும், அதுபோலவே அ.தி.மு.க.வின் பொருளாளராக ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு மேலாக என்னை அமர்த்தியும், எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்துக்கு இன்று ஒருங்கிணைப்பாளராகவும், ஏராள வாய்ப்புகளை எனக்கு வழங்கி என் கனவிலும் நான் எதிர்பாராத உயரங்களை தந்து ஒரு சாதாரண பெரியகுளத்தை சேர்ந்த பன்னீர்செல்வத்துக்கு இத்தனை பெருமைகளை அள்ளித் தந்த இந்த இயக்கத்தை விட்டு நான் பா.ஜ.க.வுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளி அவதூறாக பரப்பப்படுகின்றன.
அதுவும் என் மீது அளவில்லா நம்பிக்கை வைத்த, நான் ஆண்டவரின் வடிவத்தில் அன்றாடம் வணங்குகிற ஜெயலலிதா என் மீது வைத்த நம்பிக்கையை அதன் வழியில் அந்த மகராசி மடியிட்டு வளர்த்த மகோன்னத தொண்டர்களின் அளவற்ற பாசத்தையும் நான் மட்டுமல்ல, என் குடும்பம் மட்டுமல்ல என் வம்சாவளிகளும் எத்தனை தலைமுறைக்கு நன்றிக்கடன் செலுத்தினாலும் அது போதாது போதாது என்பதை என் உதிரத்தில் கலந்த உறுதியை கொண்டவன் நான்.
ஜெயலலிதா அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்நிலைகள் கொண்ட போதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு மோடியின் முடிசூட்டு விழாவை மனதார பாராட்டியது மட்டுமல்லாமல் அவரது ஆட்சிக்காலத்தில் மாநிலங்களவையில் பா.ஜ.க. நெருக்கடியான அறுதி பெரும்பான்மையை கொண்டிருந்தபோதும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த ஏராளமான தீர்மானங்களை அ.தி.மு.க. வின் வலுவான ஆதரவால் நிறைவேற்றி கொடுத்தவர் ஜெயலலிதா.
அதுபோலவே ஜெயலலிதாவின் பதவியேற்பு பட்டாபிஷேகத்துக்கு பாசத்தோடு வந்து கலந்து கொண்டு முன்வரிசையில் நின்று முகம் மலர வாழ்த்தியவர் நரேந்திர மோடி. இப்படி நான் வணங்கும் என் தலைவி மதித்த தலைவர்கள் மீது நானும், எனது இயக்கமும் காட்டுவது எங்கள் தாயின் வழியை பின்பற்றுகிறோம் என்பதையும், அ.தி.மு.க.வின் அரசியல் எதிர்காலத்திற்கு உகந்த முடிவாக இருக்கிறதா என்பதை உரசிப் பார்த்தும், தொண்டர்களிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் கருத்துக்களை உள்வாங்கி கொண்டும்தான்.
பா.ஜ.க.வோடு 1998-ல் கூட்டணி வைத்து இந்த நாட்டுக்கு பிரதமராக வாஜ்பாயையும், இந்த தேசத்துக்கு முதல் குடிமகனாக அணு விஞ்ஞானி அப்துல் கலாமையும் அடையாளம் காட்டிய ஜெயலலிதா 2004-ல் மீண்டும் பா.ஜ.க.வுக்கு 7 இடங்களை வழங்கி கூட்டணி அமைத்தார் என்பதெல்லாம் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வுக்கு இருக்கிற தேசப்பற்று, தெய்வ நம்பிக்கை போன்ற ஒத்த கொள்கைகளும் ஒரு காரணமாகும்.
அப்படிப்பட்ட ஜெயலலிதா வகுத்து கொடுத்த பாதத் தடத்தில் அ.தி.மு.க.வின் பிரகாசமான எதிர்காலத்துக்காக நாங்கள் மேற்கொண்டு வரும் ஒரு இணக்கத்தையும், நாங்கள் அமைத்த பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் இப்படியாக இந்த மெகா கூட்டணி ஈட்ட இருக்கும் மாபெரும் வெற்றியை நினைத்து குலை நடுக்கம் கொள்ளும் சில குள்ள நரிகள் என் மீது வதந்திகளை பரப்பி என்னையும், என் அரசியல் வாழ்க்கையையும் காயப்படுத்த அலைவதை நினைத்து மிகுந்த வேதனை கொள்கிறேன்.
ஓட்டக்காரத் தேவர் எனும் ஒரு விவசாயியின் மகனாக பிறந்த என்னை பல உச்சங்களில் அமர்த்தி மக்கள் திலகமும், மகராசி தாயும் உயிராக போற்றிய இயக்கத்தை இக்கட்டான காலத்தில் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியோடு இணைகரம் கொண்டு இந்த இயக்கத்தை இமையாக காப்பதற்கும், இந்திய அரசியலை இரு இலை இயக்கம் தான் தீர்மானிக்கும் என்கிற பொற்காலத்தை நோக்கி முன்னெடுத்து செல்வதற்கும் எனது ஆயுள் மொத்தத்தையும் நான் அ.தி.மு.க.வுக்காக ஒப்படைத்து தொண்டாற்றுகிற ஓர் ஊழியன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க.வின் கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக கொண்டு வாழும் இந்த எளியவனை கட்சி மாறப்போகிறேன், வேறு கட்சிக்கு போகப்போகிறேன் என்றெல்லாம் வடிகட்டிய பொய்யை வதந்திகளாக்கி அதனை இந்திய விடுதலைக்கு குரல் கொடுத்த ஊடகங்கள் கூட நடுநிலை என்பதை மறந்து யாருக்கோ வால்பிடித்து புரளியால் குறளி வித்தை செய்வதை நினைத்து மிகுந்த வேதனை அடைகிறேன்.
என் மீது பரப்பப்படும் அவதூறுகளை, அடுக்காத பொய் குற்றச்சாட்டுகளை கட்சி தொண்டனும் சரி, என் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழக மக்களும் செவி கொடுத்து ஏற்க மாட்டார்கள் என்ற எனது ஆழமான நம்பிக்கையையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.