சசிகலாவின் விடுதலையையொட்டி, அதிமுகவின் ஆணிவேரை அசைக்கும் வகையில் பல சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூர் சிறையில் இருந்து 27ஆம் தேதி விடுதலையாகிறார் சசிகலா. சிறையில் இருந்து சசிகலா சென்னைக்கு வருகின்ற வழியில், ஏதோ ஒரு இடத்தில், எப்படியாவது அவரது பார்வையில் படும்படி நின்றுவிட்டால் போதும் என்று நினைத்தவர்களுக்கு தற்போது சந்தித்துப் பேசுவதற்கே பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாம்.
சசிகலா சிறையில் இருந்து நேரடியாக இளவரசி வீட்டிற்குச் செல்வதாகவும், அதன்பிறகு ஜெ'வின் சாமாதிக்கு வருவதாகவும் இருந்த நிலையில், தற்போது ஓசூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி காலையில் வருவதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். இந்தப் பயணத் திட்ட மாற்றத்திற்கு அதிமுகவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்களை அவர் சந்திக்க உள்ளதுதான் காரணம் எனச் செய்திகள் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் பொதுச் செயலாளர் இன்னும் நியமிக்கப்படாத நிலையிலும், சுயவிருப்பத்துடன் சசிகலா ராஜினாமா செய்யாத நிலையிலும், இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. மீண்டும் பொதுச் செயலாளர் பதவியைத் தன் வசம் கொண்டுவரவே இந்தச் சந்திப்பு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் முடிவு எடுத்த பிறகுதான் சென்னை வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளாராம் சசிகலா.