தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூடும் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இது தொடர்பாகத் தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவைக் கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும். தற்போது தேர்தலை மனதில் வைத்து பாஜக அரசு மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வந்துள்ளது.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டும். எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுமான திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் எனப் பலரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த கோரிக்கையை சபாநாயகரிடம் மூன்றாவது முறையாக வைப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.