நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கு என அக்கட்சியினர் நம்பியிருந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்தத் தேர்தலில் பல இடங்களில் பல சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தேர்தல் பிரச்சாரத்தின்போதே பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார். உடம்பில் ஏறத்தாழ 10 கிலோ தங்க நகைகளை உடுத்திக்கொண்டு, பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது எல்லாம் ஹரி நாடாரை தமிழகம் முழுக்க கவனிக்க வைத்தது.
தேர்தல் பிரச்சாரம் மட்டுமின்றி தற்போது தேர்தல் முடிவுகளிலும் அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார். காரணம் தமிழகத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அவர்தான் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் ஆலடி அருணா மற்றும் அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அதிமுக மனோஜ் பாண்டியன், 3,539 வாக்குகள் அதிகம் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக ஆலடி அருணாவை வென்றார்.
இத்தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்த ஹரி நாடார் குறிப்பாக 5 மற்றும் 6ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கைகளில் திமுக அதிமுக வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளி முன்னிலை வகித்தார். திமுக வேட்பாளரின் 5 மற்றும் 6ஆம் சுற்றின் வாக்கு நிலவரம் முறையே 1,917 மற்றும் 1,994. அதிமுக வேட்பாளரின் 5 மற்றும் 6ஆம் சுற்றின் வாக்கு நிலவரம் முறையே 2,253 மற்றும் 1,976. ஹரி நாடார் இந்தச் சுற்றுகளில் முறையே 3,049 மற்றும் 2,162.
இறுதியில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகளும், திமுக வேட்பாளர் ஆலடி அருணா 70,614 வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில், 37,727 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் ஹரி நாடார்.