முரசொலி இடம் குறித்து, டிவிட்டரில் உண்மைக்கு புறம்பான மற்றும் அவதூறான கருத்துக்களை கூறிய பா.ம.க.நிறுவனர் டாக்டர் இராமதாசுக்கு, முரசொலி அறங்காவலரும், தி.மு.க அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
அந்த நோட்டீஸில், எந்தெந்த நாட்களில் எந்தெந்த நேரத்தில் மருத்துவர் ராமதாஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து பின்வருமாறு ட்வீட் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
“பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காகவளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!”
“முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக்காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?”
“முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?”
“முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?”
“நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில்தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை!”
“முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை. மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையைத்தான் திமுகசெய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள்.அது தான் அறம். அது தான் நேர்மை!”
“முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்!”
மருத்துவர் ராமதாஸின் மேற்கண்ட ட்வீட்ஸை தனது நோட்டீஸில் வழக்கறிஞர் நீலகண்டன் தேதிவாரியாகப் பட்டியலிட்டுள்ளார். மேலும் அவர், டாக்டர் ராமதாஸ், முரசொலி இடம் குறித்து, தான் பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளை, நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்தில் நீக்கிவிடவேண்டும் என்றும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும், வருங்காலத்தில் இது போன்ற அவதூறான பதிவுகளைப் பதிவிடக்கூடாது என்றும் நோட்டீஸில் கோரியுள்ளார். தவறும் பட்சத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பாக ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அவர்களால் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு சிவில் நீதிமன்றத்தில் டாக்டர் இராமதாஸ் மீது வழக்கு தொடுக்கப்படும் எனவும், அவதூறு குற்றத்திற்காக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.