நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. திமுக இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை கொடுத்திருந்த நிலையில் அதிமுக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தது.
அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.
இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒருவரை பிரதமராக முன்னிறுத்தும் பட்சத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மோடியையே மீண்டும் பிரதமர் முகமாக கொண்டு வர இருக்கிறது. இந்தநிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வலியுறுத்தி பெற்றுத் தருவோம் மற்றும் சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்துவோம் உள்ளிட்ட வாக்குறுதிகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு பின் பாஜகவை அதிமுக ஆதரிக்குமா அல்லது இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் உருவாகும் மத்திய அரசிடம் வலியுறுத்துமா? என அரசியல் வியூகர்களாலும், சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.