தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (23.09.2021) ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முடிந்த நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கடுத்த கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். அதன்பிறகு கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.