என்மீது முடிந்தால் கட்சி நடவடிக்கை எடுத்துப்பார்க்கட்டும் என பாஜக மூத்த தலைவர் சத்ருகன் சின்கா சவால் விடுத்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்துவந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா கடந்த சனிக்கிழமை பாஜகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ஏற்கெனவே அறிந்ததுதான், அதில் வியப்பேதும் இல்லை என பாஜக தரப்பிலேயே விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது யஷ்வந்த் சின்காவைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.யும் பாஜக மூத்த தலைவருமான சத்ருகன் சின்கா கட்சியில் இருந்து விலகுவது குறித்து பேசியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் பேசிய சத்ருகன் சின்கா, ‘எனக்கெதிராக கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கப்போவதாக கேள்விப்பட்டேன். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாக என்மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று சொல்லப்பட்டது; அப்படியொன்றும் நடக்கவில்லை. என்மீது நடவடிக்கை மேற்கொள்ள நல்லநேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு வினைக்கும் அதற்கு நிகரான எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாம் விதியை அவர்களுக்கு நினைவுப்படுத்திக் கொள்கிறேன்’ என்றார்.
மேலும், மத்தியில் அலிபாபா மற்றும் 40 திருடர்களின் ஆட்சி நடப்பதாக மக்களே வெளிப்படையாக பேசிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவே இந்த ஆட்சியின் வீழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.