சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் தமிழக அரசால் கொடுக்கப்பட்ட உரையில் சில வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு ஆளுநர் படித்ததற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் மற்றும் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய சீலிடப்பட்ட கடிதத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துக் கொடுத்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக ஆளுநர் ரவிக்கு அறிவுரை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், 'தமிழ்நாடு மற்றும் அதன் மக்களுக்கு ஏற்ற வகையில் பணியாற்ற ஆளுநருக்கு அறிவுரை கூற வேண்டும். மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மக்களுக்கு பணியாற்ற அறிவுறுத்த வேண்டும். சுமூகமான உறவு மக்களாட்சியின் முக்கிய அமைப்புகளிடையே நிலவ வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.