அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தமிழகத்தில் பரப்புரை செய்யத் தடை விதிக்கக் கோரி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலமான சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "ராகுல் மீது தமிழக மக்கள் அதிக பாசம் கொண்டிருப்பதை பா.ஜ.க.வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை ராகுல் காந்தி மீறவில்லை; அவர் மீதான புகார் தவறானது. ராகுல் காந்தி மீது, பா.ஜ.க. தரப்பில் தரப்பட்ட புகாரைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் என நம்புகிறேன். தொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானது. நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும்" எனத் தெரிவித்தார்.