அதிமுக அலுவலகத்திலிருந்து ஓ.பி.எஸ். தரப்பினர் ஆவணங்கள் உட்பட பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் புகார் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஜெ.சி.டி. பிரபாகர், அதிமுகவிலிருந்து முன்னமே நீக்கப்பட்டு, அதிமுகவுக்கு சம்மந்தமே இல்லாத மூன்றாம் நபரான புகழேந்தி உட்பட ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில், 300 பேர் கொண்ட ரவுடிகள், குண்டர்கள், சமூக விரோதிகள் ஆகியோர் கையில் கத்தி, கடப்பாரை, தடி, கற்களோடு வந்தனர். தனது பிரச்சார வாகனத்தில் வந்த ஓ.பன்னீர்செல்வம், ‘அனைவரும் அடித்து உடையுங்கள்’ என்று சொல்லிக்கொண்டே, அலுவலக சாலையில் இருந்த வாகனங்களை உடைத்து, அங்கிருந்த பொதுமக்களைத் தாக்கினர். மேலும், அங்கு வந்திருந்த அதிமுகவினரை கத்தியால் வெட்டியும், குத்தியும், தடியால் தாக்கியும் அலுவலகம் அருகே வந்தனர்.
தலைமை அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அதனை உடையுங்கள் என ஓ.பி.எஸ். சொல்லி, அதனை உடைத்து அவரின் ஆதரவாளர்களுடன் உள்ளே சென்றுள்ளார். இது அனைவருக்கும் தெரியும்.
இந்தியாவில் பல்வேறு கட்சியில் இதுவரை உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டு, பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. பிறகு ஒன்றிணைந்து இருக்கிறாகள். அல்லது தனிகட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். அதிமுகவில் 1988ல் ஏற்பட்ட ஜெயலலிதா, ஜானகி பிளவின்போது அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. யாரும் இந்த அளவுக்கு தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழையவில்லை. அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால், இன்று அதிமுகவில் பெரும்பான்மையையும், தொண்டர்களிடத்தில் நன்மதிப்பையும் இழந்த ஓ.பி.எஸ். அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்று சீல் வைக்க காரணமாக இருந்துள்ளார்.
எந்த வாகனத்தில் ஓ.பி.எஸ். தலைமை அலுவலகத்திற்கு வந்தாரோ அதே வாகனத்தில், அலுவலகத்தினுள்ளே இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் தலைமை அலுவலக ஆவணங்களை எடுத்துசென்றார். இதுவும் அனைவருக்கும் தெரியும்.
11ம் தேதி இரவே எங்கள் மா.செ. ஆதிராஜராம், தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார். ஆனால், இன்று வரை காவல்துறை அந்தப் புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னதாக 8ம் தேதி எங்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சமூக விரோதிகளால் தலைமை அலுவலகத்திற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று புகார் கொடுத்தார். ஆனால், காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை.
11ம் தேதி காவல்துறையின் பாதுகாப்போடு அந்த சம்பவங்கள் நடைபெற்றது. 32 ஆண்டு தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக தலைமை அலுவலகம் திமுக அரசால் சீல் வைக்கப்பட்டது. இந்தியாவிலே இதுவரையில் எந்தக் கட்சியிலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக சரித்திரமே இல்லை” என்று தெரிவித்தார்.