தமிழகம் முழுவதும் சட்ட மன்ற பேரவை பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று தேனி மாவட்டத்திற்கு துரைமுருகன் தலைமையிலான சட்டமன்ற ஆய்வு குழு வந்தது. இந்த விஷயம் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனான எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு தெரியவரவே, சட்டமன்ற குழு தேனி கலெக்டர் அலுவலகத்தில் நுழையும்போது தானும் வந்து இணைந்து கொண்டு அந்த குழு தலைவர் துரைமுருகன் உள்பட எம்எல்ஏக்களை வரவேற்றார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குழுவின் தலைவரும், அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, இக்கூட்டம் தொடர்பாக முறையான அழைப்பு விடுக்கவில்லை தொகுதிக்கு உட்பட்ட செந்துறை, அரியலூர் மாவட்டத்தில் உள்ளது.இக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று செய்தியாளரிடம் கேள்வி எழுப்பினார். முறையாக அழைப்பு விடுக்கப்படாததால், கூட்டத்தை விட்டு வெளியேற தயாராக உள்ளதாகவும் கூறினார்.
அதிமுக எம்.எல்.ஏ இராமச்சந்திரன் இப்படி பேசுவதை எதிர்பார்க்காத அரசு கொறடா, எம்.எல்.ஏ.வை சமாதானப்படுத்தி பின்பு கூட்டத்திற்கு அழைத்து சென்றார். அவரை முறையாக அழைக்காதது ஏன் என்று விசாரித்த போது, சமீப காலமாக அதிமுகவை எதிர்த்து அவர் விமர்சனம் செய்து வருவதால் சட்டமன்ற ஆய்வு குழு கூட்டத்திற்கு முறையாக அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.