இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "முதல்வர் எதைச் செய்தாலும் ஸ்டாலின் எதிர்க்கிறார். வேளாண் திருத்த மசோதாவில் தவறு இருந்தால் கண்டிப்பாக முதல்வர் எதிர்ப்பார். எதைச் செய்தாலும் மத்திய, மாநில அரசுகளைக் குறை சொல்லி பிழைப்பு நடத்தும் ஸ்டாலின் கனவு பலிக்காது.
இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு. கூட்டணி வேறு; கொள்கை வேறு. கூட்டணி என்பது துண்டு போன்றது. கொள்கை என்பது வேட்டி போன்றது. கூட்டணியைவிட்டு கொடுக்கலாம். கொள்ளையை விட்டுக்கொடுக்க முடியாது.” எனறார்.
தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “நாங்கள் தேர்தலைச் சந்திக்க பயப்படவில்லை. தேர்தலைத் தைரியமாகச் சந்திப்போம். நாங்கள் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வெற்றி பெறுவோம். அ.தி.மு.க கடல் போல் பெரிய ஆளுமை நிறைந்தக் கட்சி. கடலில் கொந்தளிப்பு வரும். ஆனால் கடல் அப்படியே தான் இருக்கும். சில நேரங்களில் கடல் பொங்கும். ஆனால் மங்காது. அதுபோல் அ.தி.மு.க பொங்கும் கடல். அ.தி.மு.கவுக்கு எந்தக் காலமும் அழிவே கிடையாது. மீண்டும் அ.தி.மு.க ஆட்சிதான் வரும்” எனத் தெரிவித்தார்.