நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
அதே சமயம், அ.தி.மு.க. ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இன்று அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளின் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., திருவள்ளூர், மத்திய சென்னை, தஞ்சாவூர், விருதுநகர் மற்றும் கடலூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி - பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். முன்னதாக, முதல்முறையாக அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்த பிரேமலதாவிற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டணி ஒப்பந்தத்திற்குப் பிறகு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்முறையாக அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு வந்திருப்பதற்கு உண்மையாக மகிழ்ச்சி அடைகிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வாழ்ந்த இடம். ஒரு புரட்சியை ஏற்படுத்தி, சகாப்தத்தை ஏற்படுத்திய இடம் இது. விஜயகாந்தின் ஆசீர்வாதத்தோடு இன்றைக்கு இந்த இடத்தில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 2011இல் ஏற்பட்ட ஒரு மாபெரும் வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகி இருக்கிறது. அந்த வெற்றி மீண்டும் நிச்சயமாக இந்த பாராளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி நிச்சயம் தொடரும். இந்த கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி ஆகும். ஒரு வெற்றி செய்தியை தே.மு.தி.க. நாளை (21.03.2024) அறிவிக்க உள்ளது.” எனத் தெரிவித்தார்.
- படங்கள் : எஸ்.பி. சுந்தர்