ஒரு காலத்தில் பா.ம.க. கோட்டையாக இருந்தது விருத்தாசலம் தொகுதி. ஆனால், கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள், புவனகிரி தொகுதியோடு சேர்க்கப்பட்டதால், விருத்தாசலத்தில் பா.ம.க.வின் பலம் குறைந்து, தே.மு.தி.க., அ.தி.மு.க. என தொகுதி கைமாறியது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து கூட்டங்கள் நடத்திவரும் அன்புமணி ராமதாஸ், கம்மாபுரம் ஒன்றியத்திற்காகவே விருத்தாசலத்தில் கூட்டம் நடத்தினார். இதன்மூலம், பா.ம.க. விருத்தாசலத்திற்கு மாற்றாக புவனகிரியைக் குறி வைப்பது தெளிவானது.
இதுகுறித்து பா.ம.க.வினரிடையே விசாரித்தபோது, "கம்மாபுரம் ஒன்றியத்தின் கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் வாக்குகள் புவனகிரிக்கு சென்று விட்டன. அதேசமயம், நல்லூர் ஒன்றியத்தின் கிராமங்கள் விருத்தாசலத்தில் சேர்ந்ததால், பா.ம.க. வெற்றி கேள்விக் குறியானது. மக்களவைத் தேர்தலில் புவனகிரியில் அ.தி.மு.க.வுக்கு பெருவாரியான வாக்குகள் கிடைக்க பா.ம.க.தான் காரணம். அதனால், கூட்டணியே அமைத்தாலும்கூட புவனகிரியை பா.ம.க. விட்டுக் கொடுக்காது'' என்றனர்.
எம்.பி. தேர்தலில் கடலூரில் போட்டியிட்டு தோல்வியடைந்த மருத்துவர் கோவிந்தசாமி பா.ம.க. வேட்பாளராக புவனகிரியில் போட்டியிடலாம். அதேசமயம், 2016-ல் தனித்துப் போட்டியிட்டபோது, அண்ணாமலை பல்கலைக் கழக வேலையை விட்டு தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போன அசோக்குமாரும் புவனகிரியைக் குறி வைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார் என்கிறது பா.ம.க. தரப்பு.
அ.தி.மு.க. தரப்பினரோ, "கடலூர் மேற்கு மாவட்டத்தில் வரும் புவனகிரியை மா.செ. அருண்மொழித் தேவன் விட்டுக் கொடுக்கமாட்டார் என்கின்றனர். ஆனால், "விருத்தாசலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, தனி மாவட்டம் ஏற்படுத்த வேண்டும்' என்கிற கோரிக்கை நிறை வேறிவிடும் என்ற நம்பிக்கையில் அருண்மொழித்தேவன் இருக்கிறாராம். அப்படி நடந்தால், விருத்தாசலத்தின் மா.செ.வாக ஆகி, சட்ட மன்றத் தேர்தலிலும் வெற்றி பெறலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்'' என்கிறார்கள் ர.ர.க்கள். கூட்டணியில் இருக்கும் இரண்டு கட்சிகளும் ஒரே தொகுதியைக் குறிவைத்துள்ளதால், தொண்டர்களுக்குத்தான் குழப்பம்.