
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் 11-வது வார்டில் போட்டியிடும் பிரபாகரன், 12-வது வார்டில் அதிமுக சார்பில் பால்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல், முன்னாள் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கணேசன் மனைவி முத்துலட்சுமி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு அமமுகவில் இணைந்தார். அவர் தற்போது, 9-வது வார்டு அமமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இவர் தனது மகன் கார்த்திக், மேலும் ஒட்டன்சத்திரம் அதிமுக நகர இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ராஜமுருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 12-வது வார்டில் போட்டியிடும் இஸ்மாயில் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்தநிகழ்வின் போது நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.