Skip to main content

ராஜஸ்தானை குறி வைக்கும் ஆம் ஆத்மி

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

aam aadmi party focus on rajasthan assembly election 

 

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

 

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே உட்கட்சி மோதல் கடுமையாக நிலவி வருகிறது. சச்சின் பைலட், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் பாஜக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி அசோக் கெலட்டுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளது.  அதே வேளையில் டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் அத்மி ராஜஸ்தான் மாநிலத்திலும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

 

இந்நிலையில் ஆம் ஆத்மி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கநகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலாவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத் மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்" ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை டெல்லி மற்றும் பஞ்சாபில் யாராலும் 50 வருடத்திற்கு வீழ்த்த முடியாது. வரும் தேர்தலில் ராஜஸ்தான் மக்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்தால் ராஜஸ்தானில் இருந்தும் ஆம் ஆத்மியை 50 வருடத்திற்கு யாராலும் நீக்க முடியாது என்ற வகையில் சேவைகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்போம்.

 

நாங்கள் இங்கு வரும்போது முதல்வர் அசோக் கெலாட்  தனது சுவரொட்டிகளை கங்காநகர் முழுவதிலும், இந்த மைதானத்தைச் சுற்றிலும் ஒட்டியிருப்பதைப் பார்த்தோம். கடந்த 5 ஆண்டுகளாக முதல்வராக பணியாற்றி இருந்தால் அவர் இதைச் செய்ய வேண்டியதில்லை என்பதை நான் அவருக்குச் சொல்ல விரும்புகிறேன். சுமார் 15 - 20 பேர் இங்கு வந்து நாற்காலிகளை தூக்கி வீசுகிறார்கள். இதெல்லாம் கோழைகளின் செயல். அசோக் கெலாட் முதல்வராக 5 ஆண்டுகளாக பணியாற்றவில்லை. எனவே ஆம் ஆத்மி பேரணிகளை அழிக்க முயற்சிக்கிறீர்கள். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழலில் ஈடுபட்டுள்ளன. வசுந்தரா ராஜே ஆட்சியின் போது, அசோக் கெலாட் வசுந்தரா ராஜே மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இன்று அசோக் கெலாட்டின் அரசு ஆட்சிக்கு வந்ததும், சச்சின் பைலட் வசுந்தர ராஜேவை கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அசோக் கெலாட் வசுந்தர ராஜேவை  நான் கைது செய்ய மாட்டேன். அவர் என் சகோதரி போன்றவர் என்கிறார்" என பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்