பார்க்கிங் தகராறில் வாலிபர் பலி
கிழக்கு டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் முன் இரு சக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். கிழக்கு டெல்லி கீதா காலனியில் உள்ள ஜீல் சவுக் பகுதி சாலையில் ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு, இன்ஸ்சுரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் நிஷாந்த் அரோரா(29) மற்றும் அவரது நண்பர் கவுரவ் சர்மா ஆகியோர் சாப்பிட வந்தனர். அவர்கள் தங்கள் வாகனத்தை பார்க்கிங் செய்துவிட்டு திரும்பியபோது, எதிரே வந்த மர்ம நபர் வாகனத்தை இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தியுள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றவே, அந்த நபர் போன் மூலம் தனது கூட்டாளிகளை வரவழைத்தார். கையில் பயங்கர ஆயுதத்துடன் வந்தவர் சர்மா மற்றும் அரோரா ஆகியோர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதிலிருந்து அரோரா தப்பிக்க முயன்றும், அவருக்கு சரமாரியாக கத்தி குத்தி விழுந்தது. பின் அவரது நண்பரையும் தாக்கிவிட்டு அக்கும்பல் தப்பி சென்றது. படுகாயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மருத்துவமனை அழைத்து சென்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதில் அரோரா இறந்துவிட்டார். சர்மா ஆபத்தான நிலையை கடந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், மாயமான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.