கஞ்சா விற்ற வாலிபர் கைது
மைசூரு மாவட்டம் பிரியாபட்ணா தாலுகா பஞ்சவள்ளி கிராமத்தின் அருகே வாலிபர் ஒருவர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த ஊரக போலீசார் சம்பவத்தன்று பஞ்சவள்ளி கிராமத்தின் அருகே உள்ள ஓட்டல் அருகே மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கையில் பையுடன் சுற்றித் திரிந்தார். இவர் மீது சந்தேகமடைந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் இவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் இவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர் உனசூர் தாலுகா பிரதமை ஹள்ளி கிராமத்தை சேர்ந்த சதாம் உசேன் (30) என்றும், மைசூருவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கிராம பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.