
பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சற்று காலதாமதமாக நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசியுள்ளனர். இக்கூட்டத்தில் 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 6 மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின் எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியதும் விரைவில் அது நடக்கும் என ராகுல்காந்தி கூறியது செய்தியாளர் கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், “ராகுல்காந்தி விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க ஆவலாக உள்ளோம். எனது ஆலோசனைகளை ராகுல்காந்தி ஏற்பதில்லை. அவருக்கு முன்பே திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் தாமதமாகவில்லை. உங்கள் அம்மா சொல்வதை நீங்கள் கேட்கவில்லை என அவர் என்னிடம் சொன்னார். திருமணம் செய்து கொள்வேன் என இப்போது உறுதிப்படுத்துங்கள். நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்” என்றார். இதற்குப் பதில் அளித்த ராகுல்காந்தி, “நீங்கள் சொன்னதால் அது நடக்கும்” என்றார். லாலு பிரசாத் யாதவின் கேள்வியும் ராகுலின் பதிலும் கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.