இந்தியாவில் மூவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு சூழலில், யோகா செய்வதன் மூலம் கரோனா வருவதை தடுக்கலாம் என்ற யோகி ஆதித்யநாத்தின் பேச்சு இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, ஈரான், அமெரிக்கா என பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் மூவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் 7 நாள் யோகா திருவிழாவை தொடங்கிவைத்து பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், "யோகாவை முறையாக கற்று, தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை காத்து கொள்ள முடியும். முறையான யோகாவினால், ரத்த அழுத்தம், மாரடைப்பு, கிட்னி பிரச்னை, கல்லீரல் பாதிப்பு போன்றவை மட்டுமில்லாமல் கரோனா பாதிப்பையும் தடுக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கரோனாவுக்கு மருந்து கண்டறிய ஆராய்ச்சி பணிகள் மேற்கொண்டு வரும் சூழலில் யோகி ஆதித்யநாத்தின் இந்த கருத்து இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அதேபோல அசாம் மாநில பாஜக பெண் எம்எல்ஏ பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம் கரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என்று கூறியிருப்பதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.