இந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்றது. இதற்கான கடைசி கட்ட மக்களவை தேர்தல் நேற்று (19/05/2019) நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது. இதில் நியூஸ் 18 தொலைக்காட்சி, இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.
இந்த கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக வுக்கு சாதகமாகவே அமைந்தன. இந்நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சியில் கருத்துக்கணிப்பு தொடர்பான வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் , "காங்கிரஸ் செத்துப்போகலாம். இந்தியாவின் கருத்தியலை காப்பாற்ற இந்த தேர்தலில் பாஜக -வை தோற்கடிக்க முடியாவிட்டால், இந்திய வரலாற்றில் இந்த கட்சிக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்க முடியும். இன்று ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கான மிகப்பெரிய தடையாக தான் அது இருக்கும்" என கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.