கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமசேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது. இதனைக் கண்டு பிரார்த்தனை செய்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்த இடத்தில் தீப்பற்றி எறிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமசேரி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் குண்டு வெடிப்பு குறித்து மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை மாநில பயங்கரவாதத் தடுப்புப் படையினர் சேகரித்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “இந்த குண்டு வெடிப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இது தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைப்பேசியில் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார். தேசியப் புலனாய்வு முகமை (NIA), என்எஸ்ஜி ஆகிய மத்திய அரசின் அமைப்பும் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.