இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று உரையாற்றினார். அப்போது அவர், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மாறும் எனக் கூறியுள்ளார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) ஆண்டு பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியது வருமாறு...
சில தவறான முடிவுகளை நாங்கள் எடுத்திருக்கலாம் ஆனால் எங்களின் நோக்கம் தவறானது அல்ல. கடந்த ஏழு ஆண்டுகளில் நாடு நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது என்பதை விமர்சகர்கள் கூட ஒப்புக்கொள்வார்கள். எங்கள் அரசாங்கத்தின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. 60 கோடி மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல், மின் இணைப்பு, எரிவாயு இணைப்புகள் இல்லாமல், சுகாதார வசதிகள் கிடைக்காமல் இருந்தனர். மோடி அரசு இவை அனைத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது. இது இந்தியாவின் ஜனநாயக செயல்பாட்டில் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க உதவியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான தலைமையாலும், நாட்டின் 130 கோடி மக்களின் பங்கேற்பின் காரணமாகவும் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்தம் சிந்தாமல் நீக்கப்படும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இராம ஜென்ம பூமி பிரச்சனை அமைதியாக தீர்க்கப்படும் என்று யாரும் நினைக்கவில்லை. இடதுசாரி தீவிரவாதம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது, சுகாதார உள்கட்டமைப்பில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது, மேலும் அடுத்த 100 ஆண்டுகளை கவனத்தில் கொண்டு ஒரு நீர்க் கொள்கை கூட வகுக்கப்பட்டுள்ளது.
மோடி அரசால் தொடப்படாத பகுதி ஒன்று கூட இல்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு அரசாங்கம் 50 ஆண்டுகளில் நான்கிலிருந்து ஐந்து முக்கிய முடிவுகளை எடுக்கும் ஆனால் மோடி அரசு கடந்த 7 ஆண்டுகளில் குறைந்தது 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. 155 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. பொருளாதாரம் மற்றும் உற்பத்தியில் வேகம் ஏற்பட்டுள்ளது, மேலும் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து வலுவான பொருளாதார நடவடிக்கைகளுடன் வெளி வந்த நாடு என்றால் அது இந்தியாதான். பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் இது நடந்துள்ளது.
கரோனா பரவலின்போது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல கொள்கை முடிவுகள் இந்தியாவின் வளர்ச்சியில் நேர்மறையான நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறும். நமது பொருளாதார வளர்ச்சி விரைவில் இரட்டை இலக்கத்தை அடைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். பணவீக்கம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட 4-6% என்ற இலக்கு வரம்பிற்குள்தான் உள்ளது. இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.