ஜம்மு காஷ்மீர் பகுதியில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் மீதும் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, தேடுதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை ஐந்து மணியளவில், நக்ரோட்டாவில் இருந்து ஜம்முவை நோக்கி வந்த ட்ரக் ஒன்றை பன் சுங்கச்சாவடி அருகே பாதுகாப்பு படையினர் சோதனை செய்துள்ளார். அப்போது அதிலிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கு பாதுகாப்புப் படையினர் கொடுத்த பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினரின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ள பிரதமர் மோடி, "ஜம்மு காஷ்மீரில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது, அவர்கள் இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த மிகப்பெரிய தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. நமது பாதுகாப்புப் படைகள் மீண்டும் தங்களது துணிச்சலையும், நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. அவர்களின் விழிப்புணர்வுக்கு நன்றி, ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயக நடைமுறைகளைக் குறிவைக்கும் ஒரு மோசமான சதியை நாம் முறியடித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.