ஆண்டுக்கு 72 ஆயிரம் கொடுக்கும் காங்கிரஸ் திட்டத்தை வடிவமைத்தவர் அபிஜித் பானர்ஜி. அவருடைய திட்டத்தைத்தான் காங்கிரஸ் கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குறுதியாக அளித்தது. இது ஒரு தப்புனு, ஒரு இந்தியன் என்றும் பார்க்காமல் அபிஜித்துக்கு நோபல் பரிசா என்று வெறுப்பைக் கொட்டியிருக்கிறார் மூத்த பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்த்குமார். ராகுல் மூலம் இந்தியாவில் பணவீக்கத்தையும், வரி அதிகரிப்பையும் பரிந்துரை செய்தவர் அபிஜித். அப்படிப்பட்டவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று வெறுப்பை உமிழ்ந்து ட்வீட் செய்திருக்கிறார்.
பாஜக இப்படியென்றால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அபிஜித் பானர்ஜி நோபல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து வாழ்த்தியிருக்கிறார். இந்தியாவின் வறுமையை ஒழிக்க மிகப்பெரிய திட்டத்தை காங்கிரஸுக்கு வகுத்துக் கொடுத்தார். அவருடைய திட்டம் இந்தியாவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் உதவியது. ஆனால், அவர் பரிந்துரைத்தத் திட்டத்திற்கு மாறாக, தற்போது இந்திய பொருளாதாரத்தை அழித்து, வறுமையை ஊக்குவிக்கும் மோடிஎக்னோமிக்ஸ்தான் நமக்கு வாய்த்திருக்கிறது என்று ராகுல் தனது ட்வீட்டில் கூறியிருக்கிறார்.
அபிஜித் பானர்ஜியை பாஜக வெறுத்து ஒதுக்குவதற்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் ஆகியோர் மோடி அரசின் முடிவுகளை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து பொருளாதாரத்துக்கு சற்றும் தொடர்பில்லாத சக்திகாந்த தாஸை ரிசர்வ் வங்கி கவர்னராக மோடி நியமித்தார். அந்த முடிவை அபிஜித் கடுமையாக விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி, 2016ல் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது, இதன் விளைவு மிகவும் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்திருந்தார். பாஜகவின் வெறுப்புக்கு இதுவே காரணம் என்று மூத்த விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.