
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 6 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட்டது. 42 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவில், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களிலும், பா.ஜ.க 12 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று (04-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமருக்கு பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஏனென்றால், அவர் இந்த முறை 400 இடங்களைத் தாண்டும் என்று கூறியிருந்தார். இந்த முறை நிறைய பேர் என்னை குறைத்து மதிப்பிட்டார்கள்.
எனக்கு ஷேர் மார்க்கெட் அதிகம் புரியாது. ஆனால் இன்றைக்கு ஷேர் மார்க்கெட் பார்த்தீர்களா? நீங்கள் அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் இந்தியா பிளாக் உங்களை வீழ்த்திவிடும். இவ்வளவு கொடுமைகளை செய்தும், இவ்வளவு பணம் செலவழித்தும், மோடி மற்றும் அமித்ஷாவின் இந்த ஆணவத்தை, இந்திய அணி வென்றுவிட்டது. மோடி தோற்றுவிட்டார். அயோத்தியில் கூட தோற்றுவிட்டார்கள்.