நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் போது புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்திருந்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றிய பிறகு, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்திருந்தார். அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த உத்தரவிடக்கோரி காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயாதாக்கூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு பிறகு அமல்படுத்தப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள், சட்டப்படி செல்லுபடியாகாது என அறிவிக்க வேண்டும். சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ரத்துசெய்து மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.