கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர் பகுதியில் நெரலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் ஜோதி. மகன் ரமேஷ் உடன் தாய் பர்வதம்மாவும் வசித்து வந்தார்.
ரமேஷ் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் குடியிருந்துள்ளார். பர்வதம்மா அடிக்கடி வடமாநிலப் பெண்ணின் வீட்டிற்கு செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பர்வதம்மா திடீரென காணாமல் போனார். பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்காததால் ரமேஷ் அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பர்வதம்மாவை தேடியுள்ளனர்.
பர்வதம்மா அடிக்கடி செல்லும் இடங்களில் எல்லாம் காவல்துறையினர் தேடியுள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணின் வீட்டில் சென்று பார்க்கையில் அவரது வீடு வெளியில் பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அப்பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்ததினால் சந்தேகம் கொண்டு காவல்துறையினர் பூட்டிய வீட்டினை மாற்றுச் சாவி கொண்டு திறந்து பார்த்தனர்.
வீட்டினுள் பீரோவில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பீரோவை திறந்து பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். வடமாநிலப்பெண் பர்வதம்மாவை கொலை செய்து அவர் அணிந்துருந்த நகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மூதாட்டியை சாக்குப் பையில் கட்டி பீரோவில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மூதாட்டியை கொலை செய்துவிட்டு நகைகளை திருடிக் கொண்டு சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.