அவுரங்காபாத் ரயில் விபத்தின்போது என்ன நடந்தது என்பது குறித்து அந்த விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் தங்களது சொந்த மாநிலத்திற்கு நடைப்பயணமாகச் சென்றபோது மகாராஷ்ட்ர மாநிலம், அவுரங்காபாத்தில் சரக்கு ரயிலில் சிக்கி அவர்களில் 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ரயில் விபத்தின்போது என்ன நடந்தது என்பது குறித்து அந்த விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த விபத்தில் உயிர்பிழைத்த திரேந்தர் சிங் இதுகுறித்து கூறுகையில், "நாங்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள் ஜல்னாவின் எஸ்.ஆர்.ஜி நிறுவனத்தில் வேலை செய்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு எங்கள் அறைகளை விட்டு வெளியேறி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவுரங்காபாத்-ஜல்னா ரயில் பாதையை அடைந்தோம்.
கொஞ்சம் ஓய்வெடுத்துச் செல்லலாம் என நினைத்த நாங்கள் அங்கேயே நின்றோம். ஒருசிலர் ரயில் பாதியில் அமர்ந்து ஓய்வெடுத்தார். நானும், மற்ற இரண்டு பேரும் ரயில் பாதியில் இருந்து சில மீட்டர் தொலைவில் படுத்திருந்தோம். ரயில் பாதையில் அமர்ந்த அவர்கள் அசதி காரணமாக படிப்படியாகத் தூங்கினார்கள். சிறிது நேரம் கழித்து அந்த வழியில் ஒரு சரக்கு ரயில் வந்தது ... நான் அவர்களை எச்சரித்தேன், கத்தினேன். ஆனால் அவர்களுக்கு அது கேட்கவில்லை. ரயில் அவர்கள் மீது ஏறியது.
நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்குச் செல்ல பாஸுக்கு விண்ணப்பித்திருந்தோம். கரோனா ஊரடங்கால், நாங்கள் வேலையில்லாமல் இருந்தோம், பணமில்லாமல் இருந்தோம், எனவேதான் நாங்கள் எங்கள் கிராமங்களுக்குச் செல்ல முடிவெடுத்தோம்"எனத் தெரிவித்தார். இதற்கிடையில், அவுரங்காபாத்தில் இறந்த 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உடல்கள் சிறப்பு ரயிலில் மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.