எடெல்கிவ் மற்றும் ஹுருன் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து, இந்தியாவின் பெரும் நன்கொடையாளர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரு அமைப்புகளும் 2020-2021 ஆம் நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
அப்பட்டியலில் விப்ரோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் கடந்தாண்டு ஏப்ரல் முதல் மார்ச் 2021 வரை 9,713 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். சராசரியாகப் பார்த்தால் ஒருநாளைக்கு 27 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த வருடத்திலும் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த அசிம் பிரேம்ஜி, கரோனா காலத்தில் தனது நன்கொடையைக் கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்த்தியுள்ளார்.
இந்தியாவின் பெரும் நன்கொடையாளர்களின் பட்டியலில், இரண்டாவது இடத்தில் எச்.சி.எல் நிறுவனத்தின் ஷிவ் நாடார் உள்ளார். அவர் கடந்த நிதியாண்டில் 1263 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரனான முகேஷ் அம்பானி 577 கோடி ரூபாய் நன்கொடை அளித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் மங்களம் பிர்லா நான்காவது இடத்தில் உள்ளார். அவர் 377 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் அதானி பட்டியலில் 8 - வது இடத்தில் உள்ளார். அவர் 130 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.